ஹமாஸ் தலைவர் படுகொலை; இஸ்ரேலை பழிவாங்குவோம் - ஈரான் சபதம்

ஹமாஸ் தலைவர் படுகொலைக்கு இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் தெரிவித்துள்ளது.

Update: 2024-07-31 11:23 GMT

Image Courtesy : AFP

தெஹ்ரான்,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100-க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. மேலும், காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவரான இஸ்மாயில் ஹனியி (வயது 62) இன்று கொல்லப்பட்டார். ஈரான் தலைநகரில் உள்ள வீட்டில் இஸ்மாயில் இன்று படுகொலை செய்யப்பட்டார். இஸ்மாயிலுடன் சேர்த்து அவரது உதவியாளரும் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட இஸ்மாயில் ஹனியி ஹமாஸ் ஆயுதக்குழுவின் அரசியல் பிரிவு தலைவராக செயல்பட்டு வந்தார்.

இஸ்மாயில் ஹனியியை கொலை செய்தது யார் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. ஆனால், இஸ்ரேல்தான் இஸ்மாயிலை கொலை செய்ததாக ஹமாஸ் ஆயுதக்குழு குற்றம்சாட்டியுள்ளது. அதேபோல் ஈரான், துருக்கி, கத்தார் போன்ற நாடுகளும் இஸ்ரேலை குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், இஸ்மாயிலின் படுகொலைக்கு இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் உயர் தலைவர் அயத்துல்லா அலி காமேனி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இஸ்மாயில் ஹனியி எங்கள் அன்பிற்குரிய விருந்தாளியாக இருந்தார். தெஹ்ரானில் அவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இஸ்ரேல் தனக்கென ஒரு கடுமையான தண்டனையை தயார் செய்து கொண்டுள்ளது. இஸ்ரேலை பழிவாங்குவது ஈரானின் கடமை என்று நாங்கள் கருதுகிறோம்" என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்