ஜெர்மனியில் நாடாளுமன்றம் கலைப்பு: தேர்தல் தேதியை அறிவித்த ஜனாதிபதி

முன்கூட்டியே தேர்தலை நடத்த பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்தனர்.

Update: 2024-12-27 12:23 GMT

பிராங்க்பர்ட்:

ஜெர்மனியில் நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர் இன்று உத்தரவிட்டுள்ளார். பிப்ரவரி 23-ம் தேதி புதிய தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

சான்சலர் ஓலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான ஆளும் கூட்டணியில் விரிசல் ஏற்பட்ட நிலையில், கடந்த 16-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சான்சலர் ஸ்கால்ஸ் தோல்வி அடைந்தார். அரசு மெஜாரிட்டியை இழந்தது. இதையடுத்து முன்கூட்டியே தேர்தலை நடத்த பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்தனர். அதன்பேரில் தேர்தல் தேதியை ஜனாதிபதி இன்று அறிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அரசியலமைப்பானது, நாடாளுமன்றம் தன்னைத் தானே கலைக்க அனுமதிக்காததால், நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்தலாமா என்பதை ஜனாதிபதிதான் முடிவு செய்ய வேண்டும். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்