ஹமாஸ் அமைப்பின் பிடியில் இருந்த ராணுவ வீரர் படுகொலை: இஸ்ரேல்

இஸ்ரேல் ராணுவத்தின் கவச படையை சேர்ந்த டேனியல், காசாவில் வைத்து கொல்லப்பட்டு விட்டார் என இஸ்ரேல் உறுதிப்படுத்தி உள்ளது.;

Update:2024-02-26 07:59 IST

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில், 1,200 இஸ்ரேல் மக்கள் உயிரிழந்தனர். 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். அவர்களின் பிடியில் உள்ள 134 பேரில் 31 பேர் உயிரிழந்து விட்டனர் என்று இஸ்ரேல் சமீபத்தில் அறிவித்தது.

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், பாலஸ்தீனர்களின் மொத்த உயிரிழப்பு 29,092 ஆக உள்ளது என்று காசா சுகாதார அமைச்சகமும் தெரிவித்து இருந்தது. உயிரிழந்தவர்களில் 3-ல் 2 பங்கு மக்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். 69 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக ஒட்டுமொத்த வெற்றி கிடைக்கும் வரை போரானது தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதனால், எகிப்திய எல்லையையொட்டிய தெற்கு பகுதியில் அமைந்த ரபா நகரை நோக்கி இஸ்ரேல் ராணுவம் செல்ல திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரால், காசாவுக்கு சிறை பிடித்து செல்லப்பட்டவர்களில் இளம் ராணுவ வீரரான ஓஜ் டேனியல் (வயது 19) என்பவரும் ஒருவர் ஆவார். பீரங்கி படையில் பணியாற்றிய இவரை, சக பணியாளர்களுடன் சேர்த்து பயங்கரவாதிகள் பிடித்து சென்றனர்.

இந்த சூழலில், இஸ்ரேல் ராணுவத்தின் 7-வது கவச படையின் 77-வது பட்டாலியனை சேர்ந்தவரான டேனியல், காசாவில் வைத்து கொல்லப்பட்டு விட்டார் என ரகசிய தகவல் அடிப்படையில் இஸ்ரேல் உறுதிப்படுத்தி உள்ளது. டேனியலுக்கு பெற்றோர் மற்றும் இரட்டை சகோதரிகள் உள்ளனர்.

அவருடைய உடல் காசாவிலேயே உள்ளது. எனினும், ராணுவத்தின் ரபி கூறியதன்பேரில் அவருக்கு இன்று மதியம் 2 மணியளவில் குவார் சபா ராணுவ மயானத்தில் வைத்து இறுதி சடங்குகள் நடைபெறும். ஒரு வார காலம் நடைபெற கூடிய இந்த இரங்கலில் டேனியலின் குடும்பத்தினரும் கலந்து கொள்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்