இலக்குகளை எட்டி, மணிக்கணக்கில் பணி செய்தும் ஓரங்கட்டினர்... எலான் மஸ்க் நிறுவன பணியாளர் குமுறல்

இலக்குகளை எட்டி, மணிக்கணக்கில் பணி செய்தும்... இறந்து விடுவேன் என நினைத்து ஓரங்கட்டினர் என ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன மூத்த பணியாளர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

Update: 2022-12-03 14:40 GMT



நியூயார்க்,


எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் பொறியியலாளராக பணியாற்றியவர் ஜான் ஜான்சன் (வயது 62). இவர் தனது தொழில் பயணம் பற்றிய மன குமுறலை பிளாக் ஒன்றில் பதிவிட்டு உள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்ட செய்தியில், 2018-ம் ஆண்டில் தனது 58 வயதில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் என்னை பணியமர்த்தியது. ஆப்டிக்ஸ் எனப்படும் ஒளியியல் சார்ந்த பொறியியலில் ஆழ்ந்த நிபுணத்துவம் பெற்றதற்காக பணியில் சேர்த்தனர்.

இந்த துறையின் அனுபவம், செயற்கைக்கோள் புகைப்படங்களை விண்வெளியில் இருந்து பூமிக்கு அனுப்ப மற்றும் பெறுவது உள்ளிட்ட வெவ்வேறு பணிகளை மேற்கொள்வதற்கு முக்கிய பங்கு வகிக்கும்.

எனது பணி நேர்காணலின்போது, இளம் வயது பணியாளர்களுடன் இணைந்து சவுகரியமுடன் பணியாற்றுவீர்களா? என மூத்த உறுப்பினர் ஒருவரால் கேள்வி கேட்கப்பட்டது.

முதிர்ந்த பணியாளர்கள் என்றால் திறமை குறைந்த அல்லது கடின உழைப்புக்கு சரிப்படமாட்டார்கள் என்ற பொதுவான கருத்துக்கு மாற்றாக, உண்மையில் நான் சவாலை ஏற்கும் வகையிலேயே இருந்தேன்.

எனது வாழ்நாளில் நீண்ட நாட்களாக பணியிலேயே செலவிட்டேன். இரவு, பகல் மற்றும் வாரநாட்களில் கூட பணியாற்றி வந்தேன். வேலை முடிவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதற்கேற்ற தேவையான முயற்சிகளை கொடுத்து கொண்டே வந்தேன்.

ஸ்பேஸ்எக்சில், வாரத்திற்கு 7 நாட்களும் செலவிட்டேன். தினசரி 10 முதல் 12 மணிநேரம் பணி செய்தேன். எனக்கு தெரிந்து, என்னை விட கூடுதலாக பணியாற்றியவர்கள் என நிறுவனத்தில் யாரும் கிடையாது.

இதன்பின், கொரோனா காலத்தில் கூட தளத்திற்கு சென்று பணியாற்றினேன். தொழிலுக்காக பல இடங்களுக்கு பயணம் செய்தேன்.

எனினும் பல பொறியியலாளர்கள் தொலைதூரத்தில் இருந்தபடி பணி செய்தனர். நான் முழுவதும் கடின உழைப்பை கொடுத்தேன். 2020-ம் ஆண்டு அறுவை சிகிச்சை நடந்தபோது, நிலைமை மாறியது.

நான் இறந்து விடுவேன் அல்லது ஓய்வு பெற்று விடுவேன் என நினைத்து, என்னுடைய பணிகளை குறைந்த அனுபவம், நிபுணத்துவம் கொண்ட இளம் பணியாளர்களுக்கு கொடுத்து விட்டனர் என தெரிவித்து உள்ளார். வயது வேற்றுமை பற்றி மனிதவள துறை உயரதிகாரியிடம் சென்று அவர் புகாராக கூறியுள்ளார்.

ஆனால், அவரிடம் வர்த்தக நடைமுறைகள் மாறிவிட்டன. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் உங்களது தொழில் நுட்பம் சார்ந்த பணிகள் எதுவும் இல்லை என கூறியுள்ளனர். எனினும், நிறுவன உரிமையாளர், ஜானிடம் வேறு புதிய வேலை தருகிறேன் என உறுதி கூறியுள்ளார். ஆனால், அந்த புதிய பணி அவருக்கு ஒத்து வரவில்லை என கூறி கடந்த ஜூலையில் நிறுவனத்தில் இருந்து ஜான் விலகியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்