குருநானக் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க சீக்கியர்கள் சென்ற சிறப்பு ரெயில் தடம் புரண்டு விபத்து

குருநானக் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க சீக்கியர்கள் சென்ற சிறப்பு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

Update: 2022-11-05 18:09 GMT

சீக்கிய மதகுருவான குருநானக்கின் பிறந்தநாள் வருகிற 8-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் நங்கனா சாஹிப் நகரில் உள்ள குருத்வாராவில் சீக்கியர்கள் வழிபாடு நடத்துவதற்கு பாகிஸ்தான் ரெயில்வே அமைச்சகம் சிறப்பு ரெயில்களை ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில் நேற்று சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் இருந்து நங்கனா சாஹிப் நகருக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு சென்றது. நூற்றுக்கணக்கான சீக்கிய யாத்ரீகர்கள் இந்த ரெயிலில் பயணம் செய்தனர்.

இந்த நிலையில் பஞ்சாப் மாகாணத்தின் ஷோர்கோட் மற்றும் பீர் மஹால் ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது ரெயில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரெயிலின் 9 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி கவிழ்ந்தன.

எனினும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்கள் காயங்கள் இன்றி உயிர் தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தனி குழு அமைத்து விசாரணை நடத்த ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்