8 மணிநேரம் சித்ரவதை; மனைவி கொலை: சி.சி.டி.வி.யால் சிக்கிய முன்னாள் மந்திரி

கஜகஸ்தானின் முன்னாள் பொருளாதார மந்திரி குவாண்டிக்கிற்கு, மனைவியை கொன்ற வழக்கில் 20 வருட சிறை தண்டனை கிடைக்க கூடும் என கூறப்படுகிறது.

Update: 2024-05-04 20:27 GMT

அஸ்டானா,

மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கஜகஸ்தான் நாட்டில், 6-ல் ஒரு பெண் துணைவரால் வன்முறையை எதிர்கொள்கிறார் என அரசு தகவல் தெரிவிக்கின்றது. இந்நிலையில், முன்னாள் மந்திரி ஒருவர், அவருடைய மனைவியை படுகொலை செய்த விவகாரம் அந்நாடு முழுவதும் புயலை கிளப்பியுள்ளது. இதன் தொடர்ச்சியாக சட்டங்களை கடுமையாக்க அரசு முடிவு செய்துள்ளது.

கஜகஸ்தானின் முன்னாள் பொருளாதார மந்திரி குவாண்டிக் பீஷிம்பாயெவ் (வயது 43) என்பவர் அவருடைய மனைவி சால்டனட் நியூக்நோவா (வயது 31) என்பவரை படுகொலை செய்த குற்றத்திற்காக வழக்கை எதிர்கொண்டுள்ளார். நியூக்நோவா, 4 குழந்தைகளுக்கு தந்தையான குவாண்டிக்கின் 3-வது மனைவி ஆவார்.

கடந்த 2023-ம் ஆண்டு நவம்பரில், அல்மேட்டி பகுதியில் உள்ள அவருடைய சொந்த உணவு விடுதியில் வைத்து, மனைவியை 8 மணிநேரம் கடுமையாக தாக்கியுள்ளார். தலைமுடியை பிடித்து இழுத்து சென்று, தொடர்ந்து அடித்தும், குத்தியும், தாக்கியிருக்கிறார். இந்த காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளன.

முந்தின நாள் இரவு முழுவதும் மற்றும் சம்பவம் நடந்த அன்றும் இரண்டு பேரும் ஒன்றாக இருந்துள்ளனர். இதுபற்றி போலீசாருக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த நியூக்நோவா சுயநினைவு இழந்து போனார். 12 மணிநேரத்திற்கு பின்னரே ஆம்புலன்ஸ் ஒன்று சம்பவ இடத்திற்கு வந்துள்ளது.

ஆனால், அவர் உயிரிழந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வீடியோவில், அந்த பெண்ணை முன்னாள் மந்திரி குவாண்டிக், தரதரவென இழுத்து சென்று ஒரு மூலையில் தள்ளுகிறார். அதன்பின்னர், அடித்து உதைக்கிறார். தப்பி குளியலறைக்கு சென்ற அவரை, கதவை உடைத்து கொண்டு, உள்ளே சென்று, வெளியே இழுத்து வந்து தாக்குகிறார்.

இதில், நியூக்நோவாவின் முகம், தலை, கைகள் மற்றும் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டு உள்ளன. இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. ஆனால், நியூக்நோவா அவராகவே காயங்களை ஏற்படுத்தி கொண்டு உயிரிழந்து விட்டார் என கோர்ட்டில் குவாண்டிக் வாதிட்டுள்ளார். இந்த வழக்கில் அவருக்கு 20 வருட சிறை தண்டனை கிடைக்க கூடும் என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, அந்நாட்டில் துணைவரை துன்புறுத்துவதற்கு எதிரான சட்டங்களை கடுமையாக்கும் மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த மசோதாவில் அதிபர் காசிம்-ஜோமர்த் தொகாயெவ் கையெழுத்திட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்