இங்கிலாந்தில் புதிதாக 71 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி

இங்கிலாந்து நாட்டில் புதிதாக 71 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.;

Update:2022-05-31 10:03 IST

லண்டன்,

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் பல வெளிநாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு பரவி வருகிறது. ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் காணப்பட்ட குரங்கு அம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகிறது.

இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 பேருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

இதுபற்றி இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், இங்கிலாந்தில் 71 பேருக்கு புதிதாக குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனால், கடந்த 7ந்தேதியில் இருந்து இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 179 ஆக உயர்ந்து உள்ளது என ஸ்கை நியூஸ் தெரிவித்து உள்ளது.

புதிய பாதிப்புகள் காணப்பட்டாலும், பொதுமக்களுக்கு ஆபத்து குறைவே என்றும் தெரிவித்து உள்ளது. எனினும், நோய் பாதித்தவர்கள் தொடர்ந்து 21 நாட்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.

இதுதவிர, பெரிய அம்மை தடுப்பூசியையும் அந்நாட்டு சுகாதார அமைப்பு பாதுகாப்பிற்காக இருப்பு வைத்து உள்ளது. இதனை குரங்கு அம்மை பாதித்தவருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு செலுத்துவதற்காக இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதனால், அறிகுறியுடன் கூடிய தொற்று மற்றும் கடுமையான பாதிப்புக்கான ஆபத்து குறையும்.

Tags:    

மேலும் செய்திகள்