போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய ராஜபக்சே கட்சி எம்.பி.க்கள் 2 பேர் கைது
இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் சம்பந்தப்பட்ட ராஜபக்சே கட்சி எம்.பி.க்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் போலீஸ் அதிகாரி உள்பட பலர் கைது செய்யப்பட உள்ளனர்.;
கொழும்பு,
200 பேர் காயம்
இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவும் ராஜினாமா செய்யக்கோரி, கடந்த மாதம் 9-ந் தேதி போராட்டம் தொடங்கியது.
அதிபர் அலுவலகம் அருகே காலிமுக திடலிலும், மகிந்த ராஜபக்சே வீடு அமைந்துள்ள டெம்பிள் ட்ரீஸ் பகுதியிலும் இந்த போராட்டம் நடந்து வந்தது.
இதற்கிடையே, மேற்கண்ட 2 இடங்களிலும் அமைதியாக போராடி வந்தவர்கள் மீது கடந்த 9-ந் தேதி ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியினர் கடுமையான தாக்குதல் நடத்தினர். இதில் 200-க்கு மேற் பட்டோர் காயம் அடைந்தனர்.
22 பேர் மீது சந்தேகம்
போராட்டக்காரர்கள் மீதான ஆளும் கட்சியினர் தாக்குதல் குறித்து சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. 230 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாக்குதலில் சம்பந்தம் உள்ளதாக ஆளும் கட்சி எம்.பி.க்கள் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ, மிலன் ஜெயதிலகே, சனத் நிஷந்தா, சஞ்சீவா எடிரிமன்னா, மூத்த போலீஸ் டி.ஐ.ஜி. தென்னகூன் உள்பட 22 பேர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அவர்கள் மீது நேரடி மற்றும் சந்தர்ப்ப சாட்சியங்கள் இருந்தால், அவர்களை கைது செய்யுமாறு சி.ஐ.டி.க்கு அட்டார்னி ஜெனரல் உத்தரவிட்டார்.
2 எம்.பி.க்கள் கைது
இதையடுத்து, ஆளும் கட்சி எம்.பி.க்கள் சனத் நிஷந்தா, மிலன் ஜெயதிலகே ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர்களுடன் இவர்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.
சந்தேகத்துக்குரிய 22 பேர் பட்டியலில் உள்ள டி.ஐ.ஜி. தென்னகூனிடம் சி.ஐ.டி. அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். அவர் தாக்குதல் நடத்தியவர்களை ஊக்கப்படுத்தியதாக ஆதாரம் கிடைத்துள்ளது.
அட்டார்னி ஜெனரலின் உத்தரவை பின்பற்றுமாறு போலீஸ் ஐ.ஜி.யும் சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டுள்ளார். எனவே, டி.ஐ.ஜி. தென்னகூன் உள்பட 22 பேர் மீதும் நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது. அதில் பெரும்பாலானோர் ஆளும் கட்சி அரசியல்வாதிகள் ஆவர்.