"நீங்கள் ஒரு டிக்டாக் நட்சத்திரம்"- உக்ரைன் அதிபரை பாராட்டிய மாணவி

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவியை செலன்ஸ்கி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

Update: 2022-03-18 07:43 GMT
Image Courtesy :@WeeliyumF
கீவ்,

உக்ரைன் நாடு நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி 24ந்தேதி அந்நாடு மீது ரஷியா படையெடுத்தது. இந்த போர் இன்று 23-வது நாளாக தொடர்கிறது.

இதனால், உக்ரைன் - ரஷிய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அவை தோல்வியிலேயே முடிகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் கத்யா விளாசென்கோ என்ற 16 வயதான உக்ரைன் மாணவி தன்னுடைய 8 வயது சகோதரன் இஹோரை காப்பாற்றிக்கொண்டு தப்பிக்கும்போது காயம் அடைந்தார். அதன் பிறகு அவரது தந்தை கத்யாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

இந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த மாணவியை அதிபர் செலன்ஸ்கி  நேரில் சென்று சந்தித்து ஆறுதலுடன் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

மருத்துவமனையில் மாணவியை சந்தித்த செலன்ஸ்கி அவர் குணமடைய பூங்கொத்துக்களை கொடுத்து ஆறுதல் தெரிவித்தார். 

அப்போது அதிபர் செலன்ஸ்கி உடன் பேசிய அந்த மாணவி "அனைவரும் உங்களைப் பற்றி பேசுகிறார்கள். டிக்டாக்கில் அனைவரும் உங்களை ஆதரிக்கிறார்கள்" என தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்த செலன்ஸ்கி "அப்போது நாம் டிக்டாக்கை ஆக்கிரமித்துள்ளோம்" என அந்த மாணவியிடம் புன்னகையுடன் கூறினார்.

இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

மேலும் செய்திகள்