நிஜ வாழ்வில் அப்படியே பிரதிபலித்தது:: உக்ரைன் அதிபர் நடித்த அரசியல் நையாண்டி டி.வி. தொடர் மறுஒளிபரப்பு
2015-ம் ஆண்டு வெளியான நையாண்டி நகைச்சுவை தொடரில் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஆசிரியராக நடித்துள்ளார்.
கீவ்,
உக்ரைன் நாட்டின் அதிபராக இருந்து, ரஷியா தொடுத்துள்ள போரால் இன்று உலகம் அறிந்த தலைவராக மாறி இருப்பவர், 44 வயதே ஆன விளாடிமிர் ஜெலன்ஸ்கி.
இவரது வாழ்க்கையில் சுவாரசியங்களுக்கு பஞ்சம் இல்லை.
இவர் ஆரம்பத்தில் நடிகராக இருந்தார். அப்போது அங்கு டி.வி.யில் ‘சர்வண்ட் ஆப் தி பீப்பிள்’ (மக்கள் சேவகன்) என்ற அரசியல் நையாண்டி டி.வி. தொடர்’ மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.
2015-2019 ஆண்டுகளில் டி.வி.யில் ஒளிபரப்பான இந்த தொடரில் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, ‘வாசில் பட்ரோவிச் கோலோபோர்ட்கோ’ என்ற பள்ளி ஆசிரியர் பாத்திரத்தில் நடித்து அசத்தினார்.
இந்த தொடரில் இவர் ஊழலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி ஒரே நாளில் பிரபலமானார். அதைத் தொடர்ந்து அவர் நாட்டின் அதிபராகவும் ஆகி விடுகிறார்.
விளாடிமிர் ஜெலன்ஸ்கி நிஜ வாழ்க்கையிலும் திருப்பம் ஏற்பட்டது. ‘சர்வண்ட் ஆப் தி பீப்பிள்’ பெயரிலேயே தொடங்கப்பட்ட அரசியல் கட்சியில் சேர்ந்தார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். 2019-ம் ஆண்டு மே மாதம் 20-ந் தேதி உக்ரைன் அதிபர் பதவியை ஏற்றார். டி.வி. தொடரில் அவர் நடித்தது, நிஜ வாழ்க்கையில் பிரதிபலித்தது. அவர் அதிபர் பதவிக்கு வந்ததும் இந்த டி.வி.தொடர் நின்று போனது.
இப்போது ரஷியா தொடுத்துள்ள போரை அவர் துணிச்சலுடன் எதிர்கொண்டு வருகிறார். இதனால் உலக நாடுகளில் மிகவும் பேசப்படுகிற ஒரு தலைவராக மாறி இருக்கிறார். இதனால் அவர் நடித்த டி.வி. தொடருக்கு உலகமெங்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. நெட்பிளிக்ஸ் நிறுவனத்தார் இந்த டி.வி. தொடரை அமெரிக்காவில் மீண்டும் ஒளிபரப்ப உள்ளனர். இதை ஒரு டுவிட்டர் பதிவில் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நீங்கள் கேட்டீர்கள். மீண்டும் வந்து விட்டது. சர்வண்ட் ஆப் தி பீப்பிள் மீண்டும் அமெரிக்காவில் நெட்பிளிக்சில் கிடைக்கிறது. 2015-ம் ஆண்டு வெளியான நையாண்டி நகைச்சுவை தொடரில் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஆசிரியராக நடித்துள்ளார். அவர் ஊழலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய வீடியோவுக்கு பிறகு பிரபலம் ஆகிறார். எதிர்பாராதவிதமாக நாட்டின் அதிபராகவும் ஆகி விடுகிறார்” என கூறப்பட்டுள்ளது.