ஹைதி நாட்டுக்கு விமானங்கள் செல்ல தடை விதித்தது அமெரிக்கா

வன்முறையாளர்கள் அமெரிக்க விமானத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்தியதையடுத்து விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

Update: 2024-11-13 06:08 GMT

வாஷிங்டன்:

அமெரிக்கா அருகே உள்ள கரீபியன் தீவு நாடான ஹைதியில் கடந்த 2021-ம் ஆண்டு அதிபர் ஜோவெனல் மோய்சே சுட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து போராட்டம், வன்முறை என கலவர பூமியாக ஹைதி மாறியிருக்கிறது. அதிபர் படுகொலைக்கு பிறகு நாட்டில் தேர்தலும் நடத்தப்படவில்லை.

ஹைதியின் அடுத்த பிரதமர் மற்றும் மந்திரிசபையை தேர்வு செய்வதற்காக கடந்த ஏப்ரல் மாதம் இடைக்கால கவுன்சில் ஏற்படுத்தப்பட்டது. நாட்டில் பரவி வரும் வன்முறையை அடக்க இது உதவும் என்ற நம்பிக்கையுடன் இந்த கவுன்சில் நிறுவப்பட்டது.

நாட்டில் ஜனநாயக ஒழுங்கை மீண்டும் நிலைநாட்டுவதற்காக அமைக்கப்பட்ட இந்த கவுன்சில், இடைக்கால பிரதமர் கேரி கோனிலை பதவி நீக்கம் செய்துவிட்டு, புதிய இடைக்கால பிரதமராக தொழிலதிபர் ஏலிஸ் டிட்டர் பில்ஸ்-எய்மை தேர்வு செய்தது. அவர் நேற்று முன்தினம் பதவியேற்றார். அப்போது நாட்டில் வன்முறையை கட்டுப்படுத்தி அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் மீண்டும் வன்முறை வெடித்தது. வன்முறையாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஆங்காங்கே மோதல் நடைபெறுகிறது.

வன்முறையாளர்கள் நேற்று முன்தினம் தலைநகர் போர்ட் அவ் பிரின்ஸ் விமான நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அமெரிக்காவில் இருந்து வந்த 'ஸ்பிரிட்' விமானம், போர்ட் அவ் பிரின்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, வன்முறையாளர்கள் அந்த விமானத்தின் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

சுதாரித்து கொண்ட விமானிகள் விமானத்தை வான்நோக்கி உயர்த்தி பறந்து தப்பினர். பின்னர் அண்டை நாடான டொமினிகன் குடியரசு நாட்டில் அந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் விமான பணிப்பெண் ஒருவர் காயம் அடைந்தார். விமானத்தில் இருந்த 155 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில் விமானம் லேசாக சேதமடைந்தது. மேலும் ஹைதி தலைநகர் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட முயன்ற மற்றொரு விமானம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த வன்முறையைத் தொடர்ந்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. பல்வேறு விமான நிறுவனங்கள் ஹைதிக்கான விமான சேவையை நிறுத்தி வைத்துள்ளன. அமெரிக்க விமான நிறுவனங்கள் ஹைதிக்கு விமானங்களை இயக்குவதற்கு ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளளது. இந்த உத்தரவை அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இதேபோல் அனைத்து ஐ.நா. விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. ஹைதிக்கு 20 லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட உணவு மற்றும் மருத்துவப் பொருட்களை விநியோகம் செய்வதையும் ஒத்திவைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்