நேட்டோ படையில் இருந்து வெளியேற அமெரிக்கா விரும்பவில்லை - டிரம்ப் சொல்கிறார்
நேட்டோ படையில் இருந்து வெளியேற அமெரிக்கா விரும்பவில்லை என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்,
1949-ல் உருவான நேட்டோ அமைப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி உள்பட 29 நாடுகள் உள்ளன.
உறுப்பு நாடுகளுக்கிடையே பாதுகாப்பு ரீதியிலான உறவை வலுப்படுத்துவதையும், ஆயுதங்களை இறக்குமதி, ஏற்றுமதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்த அமைப்பு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் எழுதியுள்ள ‘தி ரூம் வேர் இட் ஹேப்பனுடு’ என்ற புத்தகத்தில் “உறுப்பு நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்துக்கு மேல் நேட்டோ படைகளுக்கு செலவிட தவறினால் அமெரிக்கா நேட்டோ படையில் இருந்து வெளியேறும் என டிரம்ப் மிரட்டுவார்” எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் டிரம்ப் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது அவர் “நேட்டோ படையில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதை நான் விரும்பவில்லை. ஆனால் உறுப்பு நாடுகள் தங்களின் பங்கை முறையாக செலுத்த வேண்டும். 2 சதவீதம் என்பது மிகவும் குறைவு சில நாடுகள் அதையும் சரியாக செலுத்தவில்லை. இதே நிலை நீடித்தால் நேட்டோ படையில் அமெரிக்கா தனது பங்களிப்பை குறைத்து கொள்ளும்” எனக் கூறினார்.