எகிப்தில் பரிதாபம்; ஆஸ்பத்திரியில் தீப்பிடித்து கொரோனா நோயாளிகள் 7 பேர் உடல் கருகி சாவு

எகிப்தில் ஆஸ்பத்திரியில் தீப்பிடித்து கொரோனா நோயாளிகள் 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2020-07-01 00:43 GMT
கெய்ரோ,

எகிப்து நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக தீவிரமாக உள்ளது. அங்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 66 ஆயிரத்து 700 கடந்துள்ளது. அதேபோல் பலி எண்ணிக்கையும் 3 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் அந்த நாட்டின் 2வது மிகப்பெரிய நகரமான அலெக்சாண்டிரியாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஏராளமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை இந்த ஆஸ்பத்திரியில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ கண்ணிமைக்கும் நேரத்தில் ஒட்டு மொத்த ஆஸ்பத்திரிக்கும் பரவியது. இதையடுத்து டாக்டர்கள் மற்றும் நர்சுகள் நோயாளிகளை அழைத்துக் கொண்டு வேகவேகமாக ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறத் தொடங்கினர்.

ஆனால் அதற்குள் தீ நாலாபுறமும் சூழ்ந்து கொண்டதால் பலர் வெளியேற முடியாமல் ஆஸ்பத்திரிக்குள் சிக்கிக் கொண்டனர். இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் 5 தீயணைப்பு வாகனங்களில் ஏராளமான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அவர்கள் நீண்ட நேரமாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் தீயின் கோரப்பிடியில் சிக்கி கொரனோ நோயாளிகள் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். அடையாளம் காணமுடியாதபடிக்கு அவர்களது உடல் கரிகட்டையானது.

இந்த தீ விபத்தில் மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மற்றொரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும் செய்திகள்