பிரதமர் மோடிக்கு ஆழ்மனதில் இருந்து வாழ்த்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர்

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பிரதமர் மோடிக்கு தனது ஆழ்மனதில் இருந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-23 10:06 GMT
ஜெருசலேம்,

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.  இந்த தேர்தலில், பா.ஜ.க. 292 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது.  காங்கிரஸ் கட்சி 51 என்ற மிக குறைந்த தொகுதிகளிலேயே முன்னிலை வகிக்கின்றது.  இதனால் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை எழுந்துள்ளது.

இதனை அடுத்து, இஸ்ரேல் நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு முதல் ஆளாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது வாழ்த்துகளை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.  அவர் ஹீப்ரு மற்றும் இந்தி மொழிகளில் வெளியிட்டுள்ள செய்தியில், தேர்தலில் மிகப்பெரும் வெற்றி பெறுவதற்காக எனதருமை நண்பனே, என் ஆழ்மனதில் இருந்து வாழ்த்துகள் என்று தெரிவித்து உள்ளார்.

இந்த தேர்தல் முடிவுகள், உங்களது தலைமையை மற்றும் உலகின் மிக பெரிய ஜனநாயக நாட்டை வழிநடத்தி செல்லும் உங்களது திறன் ஆகியவற்றுக்கு மீண்டும் ஒப்புதல் அளிக்கும் வகையில் அமையும்.  நம்மிடையே மற்றும் இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையேயான சிறந்த நட்பினை வலுப்படுத்துவதற்காக நாம் தொடர்ந்து செயல்படுவோம்.  அதனை புதிய உச்சத்திற்கு வழிநடத்தி செல்வோம் என அவர் தெரிவித்து உள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகருக்கு சென்று இறங்கினார்.  அங்கு சென்ற முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்ற மோடியை நேதன்யாகு விமான நிலையத்தில் வரவேற்றார்.  இதன்பின் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரியில் நேதன்யாகு இந்தியாவில் பயணம் மேற்கொண்டார்.  இரு நாட்டு தலைவர்களுக்கு இடையேயான புரிந்துணர்தலை ஊடகங்கள் பெரும் அளவிற்கு விவாதித்துள்ளன.

மேலும் செய்திகள்