அமெரிக்காவில் துணை அட்டார்னி ஜெனரல் ராஜினாமா
அமெரிக்காவில் துணை அட்டார்னி ஜெனரலாக பதவி வகித்து வந்தவர் ராட் ரொசென்ஸ்டெய்ன். இவர் நேற்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
வாஷிங்டன்,
ராட் ரொசென்ஸ்டெய்ன் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி டிரம்பிடம் வழங்கினார். நம்பகமான ஆதாரங்கள், கட்சி சாராதவை என்ற அடிப்படையில் தாம் எவ்வித அச்சமும் இன்றி சட்டத்தை நடைமுறைப்படுத்தியதாக அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ஆட்சி காலத்தில் பதவிக்கு வந்த ராட் ரொசென்ஸ்டெய்ன், 2016–ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்த விசாரணையில் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார். சிறப்பு விசாரணை குழுவின் தலைவராக ராபர்ட் முல்லரை இவர்தான் நியமித்தார்.
வில்லியம் பாரை அட்டார்னி ஜெனரலாக டிரம்ப் நியமனம் செய்ததுமே, ராட் ரொசென்ஸ்டெய்ன் பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் முல்லர் தலைமையிலான விசாரணைக்குழுவின் அறிக்கையை பொதுமக்களுக்கு அறிவிக்கும் வரை பதவியில் நீட்டிக்க அவர் விரும்பினார்.
அதன்படி சிறப்பு விசாரணைக்குழுவின் அறிக்கை சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ராட் ரொசென்ஸ்டெய்ன் தற்போது பதவி விலகி உள்ளார்.