வங்காளதேசம்: மாணவர்கள் போராட்டத்தில் வெடித்த வன்முறை - பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

வங்காளதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் 17 பேர் உயிரிழந்தனர்.

Update: 2024-07-19 02:25 GMT

டாக்கா,

வங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், இந்த இடஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெறுவதாகவும், இதை ரத்து செய்யவேண்டும் எனவும் டாக்கா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு 30 சதவீத இடஒதுக்கிட்டை ரத்து செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 30 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற கூறி ஐகோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்தது.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கல்லூரி, பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர்.

போராட்டத்தில் ஈடுபடும் மாணவ-மாணவிகளுக்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அதேவேளை, போராட்டக்காரர்களை அந்நாட்டு அரசு அடக்கி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் விரட்டியடித்து வருகின்றனர். இதனால் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த போராட்டத்தில் நடந்த வன்முறையில் ஏற்கனவே 6 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வெடித்த வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. போராட்டம் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில் வங்காளதேசம் செல்வதை தவிர்க்குமாறு பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.  

Tags:    

மேலும் செய்திகள்