'ஹமாஸ் இதை செய்தால் அடுத்த நாளே போர் முடிந்துவிடும்...' - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

பணய கைதிகளை பத்திரமாக மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்பதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளதாக பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.;

Update:2024-10-18 10:29 IST

ஜெருசலேம்,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது.

இதற்கு பதிலடியாக காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் அரசு போர் தொடுத்தது. ஓராண்டை கடந்து நடந்து வரும் மோதலில் காசா பகுதியில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இந்த போரால் காசாவில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது.

இதற்கிடையில், காசாவில் போர்நிறுத்தம் கொண்டு வந்து அங்குள்ள மக்களுக்கு உணவு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என இஸ்ரேல் அரசிடம் சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்கும் வரை போர்நிறுத்தம் ஏற்படாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ந்தேதி நடந்த தாக்குதலுக்கு பின்புலத்தில் இருந்து செயல்பட்ட முக்கிய புள்ளியான, ஹமாஸ் தலைவர் யாஹியா சின்வாரை இஸ்ரேல் பாதுகாப்பு படை தாக்கி அழித்துள்ளது. இதனை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி செய்துள்ளார். இந்நிலையில், போர்நிறுத்தம் ஏற்பட என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து காசா மக்களிடம் வீடியோ வாயிலாக பெஞ்சமின் நெதன்யாகு பேசியுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது;-

"ஓராண்டுக்கு முன் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட யாஹியா சின்வார் மரணமடைந்து விட்டார். அவர் ராபாவில் நடந்த தாக்குதலில் இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர்களால் கொல்லப்பட்டார். காசாவில் நடந்து வரும் போர் இத்துடன் முடியவில்லை. ஆனால் இது முடிவிற்கான ஆரம்பமாகும்.

காசா மக்களிடம் நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். ஹமாஸ் அமைப்பினர் தங்கள் ஆயுதங்களை சமர்ப்பித்து, பணய கைதிகளை விடுவித்தால் அடுத்த நாளே இந்த போர் முடிவுக்கு வரலாம். ஹமாஸ் அமைப்பினரிடம் தற்போது 23 நாடுகளின் குடிமக்கள் மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 101 பேர் பணய கைதிகளாக உள்ளனர்.

அவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்பதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது. பணய கைதிகளை எங்களிடம் ஒப்படைக்க வருபவர்களின் பாதுகாப்பிற்கு இஸ்ரேல் உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால் பணய கைதிகளை துன்புறுத்துபவர்களிடம் நான் ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். இஸ்ரேல் உங்களை வேட்டையாடி, நீதியை நிலைநாட்டும்.

மேலும் காசா மக்களுக்கு நம்பிக்கைக்குரிய மற்றொரு செய்தியையும் கூறுகிறேன். ஈரானால் உருவாக்கப்பட்ட பயங்கரவாத கட்டமைப்பு நமது கண் முன்னால் அழிந்து கொண்டிருக்கிறது. நஸ்ரல்லா, மொஹ்சின், ஹானியே, டெய்ப், சின்வார் ஆகியோர் உயிரிழந்துவிட்டனர். தனது சொந்த மக்களிடமும், ஈராக், சிரியா, லெபனான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளிலும் ஈரான் கட்டமைத்த பயங்கரவாத ஆட்சியும் விரைவில் முடிவுக்கு வரும்.

மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியும், செழிப்பும் ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறவர்கள் அனைவரும், ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதற்காக ஒன்றிணைய வேண்டும். நாம் ஒன்று சேர்ந்து இருள் சக்திகளை அழித்து, ஒளி மற்றும் நம்பிக்கையுடன் கூடிய எதிர்காலத்தை உருவாக்குவோம்."

இவ்வாறு பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்