தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் 13-வது சட்டத்திருத்தம் அமல்படுத்தப்படும்: அதிபர் ரணில் திட்டவட்டம்
இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்புரையாற்றிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே 13-வது சட்டத்திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவேன் என தெரிவித்தார்.
கொழும்பு,
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று 1987-ம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே ஒப்பந்தம் மூலம் இலங்கை அரசியல் சட்டத்தில் 13-வது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அந்த சட்டதிருத்தம் தமிழர் பகுதியான வடக்கு கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைக்கவும், தமிழர்களுக்கு அதிகார பரவல் அளிக்கவும் வகை செய்கிறது. ஆனால் அந்த சட்டதிருத்தம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்புரையாற்றிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே 13-வது சட்டத்திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவேன் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதுபற்றி அவர் கூறுகையில், "மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களை குறைத்து மாகாண சபைகளின் செயற்பாடுகளை அர்த்தமுள்ளதாக மாற்றும் வகையில் 13-வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளேன். மாகாண சபையின் எதிர்கால பங்கு குறித்து நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும்.
எந்த அரசியல் கட்சியும் 13-வது சட்டத்திருத்தத்தை எதிர்க்கவில்லை. 13-வது சட்டத்திருத்தத்தின் மூலம் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கான வழிகளை ஆழமாக ஆய்வு செய்ய அவர்களை அழைக்கிறேன். நாடாளுமன்றம் இறுதி முடிவெடுக்கும் வகையில் அவர்களின் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என கூறினார்.