இந்தோனேசியாவில் திடீரென வெடித்து சிதறிய எரிமலை.. மலையேற்ற வீரர்கள் 11 பேர் பலி
3 பேர் மட்டுமே உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர். மீதமுள்ள 12 பேரை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.;
ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் மராபி என்ற எரிமலை நேற்று திடீரென வெடித்து சிதறியது. நாலாபுறமும் நெருப்புக் குழம்புகள் சிதறின. விண்ணை முட்டும் அளவுக்கு சாம்பல் படர்ந்தது.
இதனால் அங்கு மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த வீரர்கள், அவசரம் அவசரமாக திரும்பினர். மொத்தம் 75 மலையேற்ற வீரர்கள் அங்கு சென்றிருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களில் 46 பேர் கீழே இறங்கிவிட்டனர். அவர்களில் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டிருப்பதால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மற்றவர்களை மீட்கும் முயற்சியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 11 பேர் சடலமாக கண்டறியப்பட்டனர். 3 பேர் மட்டுமே உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர். மீதமுள்ள 12 பேரை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.
பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான இந்தோனேசியாவில் சிறியதும் பெரியதுமான சுமார் 130 எரிமலைகள் உயிர்ப்புடன் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.