கொரோனா பரிசோதனையில் உலகிலேயே இந்தியா 2-வது இடம்

கொரோனா வைரஸ் பரிசோதனையில் உலகிலேயே இந்தியா 2-வது இடத்தில் இருப்பதாக வாஷிங்டன் வெள்ளை மாளிகை கூறி உள்ளது.

Update: 2020-07-17 22:15 GMT
வாஷிங்டன், 

உலகையே கலங்கடித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல், ஒவ்வொரு நாளும் இந்தியாவில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் நேற்றும் கூட ஒரே நாளில் சுமார் 35 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையும் 10 லட்சத்தை கடந்துள்ளது.

ஆனால் இதற்காக பொதுமக்கள் பீதி அடையத்தேவையில்லை.

ஒவ்வொரு நாளும் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தொற்றை விரைவாக கண்டுபிடித்து, பரவலை தடுப்பதற்காக பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறபோது தொற்று பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

அந்த வகையில் கொரோனா பரிசோதனையில் இந்தியா, உலகிலேயே இரண்டாவது இடம் வகிக்கிறது என அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகை கூறி உள்ளது.

இது தொடர்பாக நேற்று முன்தினம் வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கெய்லி மெக் எனானி நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரிசோதனைகளைப் பொறுத்தமட்டில், அமெரிக்காவில் 4 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டள்ளன. அந்த வகையில் அமெரிக்கா உலகில் முதல் இடத்தில் உள்ளது.

அதற்கு அடுத்த இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் 1 கோடியே 20 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

(இந்தியாவில் நேற்று முன்தின நிலவரப்படி 1 கோடியே 30 லட்சத்து 72 ஆயிரத்து 718 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கடந்த சில நாட்களாக சராசரியாக தினமும் 3¼ லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன.)

இந்த பரிசோதனை அளவு முந்தைய நிர்வாகத்தை விட முற்றிலும் மாறுபட்டது.

2009-ம் ஆண்டு ஒபாமா ஆட்சி காலத்தில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் திடீரென ‘எச்1என்1’ காய்ச்சல் பரிசோதனையை நிறுத்துமாறு மாகாணங்களுக்கு அறிவுறுத்தியது. தனிப்பட்ட எண்ணிக்கையை கணக்கிடுவதையும் நிறுத்தியது.

ஆனால் அதற்கு மாறாக தற்போதைய ஜனாதிபதி, கொரோனா பரிசோதனையில் உலகுக்கே வழிகாட்டியாக உள்ளார். வென்டிலேட்டர்கள் பயன்பாட்டிலும் அவர் உலகுக்கு வழிகாட்டுகிறார்.

13 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு தடுப்பூசி மூன்றாவது கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் சோதனையில் உள்ளது. இதெல்லாம் அசாதாரணமானது, வரலாற்று சிறப்பு வாய்ந்தது. நாங்கள் பரிசோதனையை நிறுத்தவில்லை. ஒபாமா, ஜோ பிடன் நிர்வாகம் செய்தது, வெட்கக்கேடானது.

தடுப்பூசிகளைப் பொறுத்தமட்டில் வருகிற தகவல்கள் ஊக்கம் அளிப்பதாக உள்ளது.

மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி நல்ல நம்பிக்கைக்குரிய அறிகுறிகளை காட்டுகின்றன. இந்த மாத இறுதியில் இது மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனை நிலையை அடையும். அப்போது 30 ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசி போட இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்