விமான நிலையத்தில் தூங்கியவன் விமானம் இழந்தான்: தூக்கத்தால் விமானத்தை தவற விட்ட இந்தியர்

துபாய் விமான நிலையத்தில் இந்தியர் ஷாஜகான் என்பவர் தூக்கத்தால் விமானத்தை தவற விட்ட சம்பவம் நடந்துள்ளது.;

Update: 2020-07-04 21:12 GMT
துபாய்,

‘நாடோடி மன்னன்’ படத்தில் மறைந்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய “தூங்காதே தம்பி தூங்காதே” பாடல் இன்றைக்கும் மறக்க முடியாதது, கால வெள்ளத்தில் அடித்துச்செல்ல முடியாதது. அந்தப்பாடலில், போர்படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான் .. உயர்பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்.. கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான்.. கொண்ட கடமையில் தூங்கியவன் முதல் இழந்தான்.. என வரிகள் வரும். அதில் “விமான நிலையத்தில் தூங்கியவன் விமானம் இழந்தான்” என்று ஒரு வரியையும் சேர்த்துக்கொள்ளலாம்.

அந்த பரிதாப காட்சி, துபாய் விமான நிலையத்தில் இந்திய பயணி ஒருவருக்கு வாய்த்தது. இதுபற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கால் ஐக்கிய அரபு அமீரகத்தில் 427 இந்தியர்கள் (கேரளாவை சேர்ந்தவர்கள்) சிக்கி தவித்தனர். அவர்களை மீட்டு கொண்டு வருவதற்காக கேரள முஸ்லிம் கலாசார மையம், ஜம்போ ஜெட் ராட்சத விமானத்துக்கு ஏற்பாடு செய்தது.

இந்த விமானத்தில் திருவனந்தபுரத்துக்கு திரும்பி வருவதற்காக, அபுதாபியில் ஒரு நிறுவனத்தில் ஸ்டோர்கீப்பராக வேலை செய்துவந்த ஷாஜகான் என்பவர் 1100 திர்ஹாம் (சுமார் ரூ.22,500) கொடுத்து பதிவு செய்திருந்தார்.

விமானத்தில் ஏறுவதற்காக அவர் முந்திய நாளே தூங்காமல் இருந்தார். மறுநாள் அதிகாலையிலேயே துபாய் விமான நிலையத்துக்கு வந்து விட்டார். விமானத்தில் ஏறுவதற்கான ‘செக்-இன்’ நடைமுறைகளை முடித்தார். கொரோனாவுக்கான துரித கருவி சோதனையும் முடிந்தது.

அதைத் தொடர்ந்து விமானத்தில் ஏறுவதற்காக உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணிக்கு 3-வது முனையத்தில் உள்ள ‘போர்டிங்’ வாயிலை அடைந்தார். மற்றவர்களிடம் இருந்து விலகி அமர்ந்தார். நேரம் கடந்தது. மாலை 4.30 மணியை தாண்டியபோது லேசாக கண்மூடினார். அவ்வளவுதான்.

கண்விழித்துப்பார்த்தால் அவர் ஏற வேண்டிய விமானம் புறப்பட்டு சென்று விட்டதை அறிந்து துடித்துப்போனார்.

விசா காலாவதியாகி இருந்ததால் விமான நிலையத்தை விட்டு அவர் வெளியே வர முடியாது. கையில் இருந்த பணத்தையெல்லாம் கொடுத்து விமான டிக்கெட் வாங்கிவிட்ட நிலையில் அடுத்த வேளை உணவுக்கு வழியில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கேரள முஸ்லிம் கலாசார மையத்தின் அமைப்புச்செயலாளர் ஜாசிம்கான் கள்ளம்பலம் விமான நிலையத்துக்கு சென்று, அவருக்கு சாப்பாட்டு செலவுக்கு பணம் கொடுத்து உதவி இருக்கிறார்.

இதுபற்றி விமான பயண ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த நிஜாமுதீன் கூறும்போது,“ விமானம் புறப்பட்டு சென்ற பின்னர் கண் விழித்து பார்த்த ஷாஜகான் அதிர்ச்சியில் உறைந்து போனார். அவர் எங்களை தொடர்பு கொண்டு நடந்ததை சொன்னார். ஷாஜகானை, விமான நிறுவன அதிகாரிகள் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் போய் விட்டது தெரிய வந்தது. அவர் விமானத்தை தவற விட்டது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. அடுத்த எமிரேட்ஸ் விமானத்தில் அவரை அனுப்பி வைக்க முயற்சிப்போம்” என குறிப்பிட்டார். தூக்கத்தால் விமானத்தை தவற விட்ட ஷாஜகான், அடுத்த விமானத்துக்காக இப்போது காத்திருக்கிறார்.

கடந்த மார்ச் மாதமும் இதே போன்று இன்னொரு இந்தியர் தூக்கத்தால் விமானத்தை தவற விட்டு விட்டு, ஊரடங்கால் 50 நாட்களாக காத்திருந்து நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்