மண்டல வார்டு குழு கூட்டம்
பாளையங்கோட்டையில் மண்டல வார்டு குழு கூட்டம் நடந்தது.;
பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில் வார்டு குழு கூட்டம், தலைவர் பிரான்சிஸ் தலைமையில் நேற்று நடந்தது. உதவி ஆணையாளர் காளிமுத்து, உதவி செயற்பொறியாளர் பைஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதற்கு தலைவர் பிரான்சிஸ் மற்றும் அதிகாரிகள் பதில் அளித்தனர்.
கூட்டத்தில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. பேசுகையில், ''பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் என்னென்ன தேவை என்பது குறித்து கவுன்சிலர்கள் தெரிவித்தால் அவற்றை செய்து கொடுக்க தயாராக உள்ளேன். குடிநீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளித்து அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம், முறப்பநாடு குடிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் குடிநீர் எடுத்து தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும்'' என்றார்.