வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சிகள் மண்டல இயக்குனர் ஆய்வு

வாணியம்பாடியில் வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சிகள் மண்டல இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2022-06-25 18:12 GMT

வாணியம்பாடி

வேலூர் மண்டல நகராட்சிகள் இயக்குனர் பெ.குபேந்திரன் நேற்று வாணியம்பாடிக்கு வந்தார். நகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை அவர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

வாணியம்பாடி வாரச்சந்தை மைதானத்தில் ரூ.4 கோடியே 39 லட்சம் செலவில மைதானத்தில் கட்டப்பட்டு வரும் மார்க்கெட் கட்டிடம், நிர்வாக கட்டிடம், உணவகம், பொதுக் கழிப்பிடம் மற்றும் காவலர் அறை கட்டிட பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அங்கு அதிகாரிகளிடம் பணிகளை துரிதமாக செய்யவும், முறையாகவும் முழுமையாக செய்திடவும் அறிவுரைகளை வழங்கினார்.

தொடர்ந்து வாணியம்பாடி பைபாஸ் ரோட்டில் கட்டப்படும் வரும் பயணியர் நிழற்குடை கட்டிட பணிகளை பார்வையிட்டார். பின்னர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

அப்போது அவர் கூறுகையில், ''வேலூர் மண்டலத்தில் உள்ள அனைத்து நகராட்சி பகுதிகளிலும், மாநகராட்சி பகுதியிலும் தூய்மைப் பணியாளர்கள் இல்லம் தேடி வந்து குப்பைகளை பெறும்போது அவர்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும் அவ்வாறு வழங்கினால் தான் எளிதாக குப்பைகளை உரமாக முடியும். பொதுமக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்'' என அவர் கேட்டுக் கொண்டார்.

ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லிபாபு, மேலாளர் ஜெயபிரகாஷ், சுகாதார அலுவலர் செந்தில்குமார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்