போரூர் ஏரியில் தவறி விழுந்த முதியவரை போராடி மீட்ட வாலிபர்கள்

போரூர் ஏரியில் தவறி விழுந்த முதியவரை வாலிபர்கள் உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.;

Update: 2023-05-08 06:08 GMT

போரூர் ஏரியில் முதியவர் ஒருவர் தவறி விழுந்து கரையை பிடித்தபடி மேலே வர முடியாமல் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். அந்த வழியாக சென்ற வாலிபர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்பதற்காக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் தீயணைப்பு வீரர்கள் வர தாமதம் ஆனதால் அங்கிருந்த வாலிபர்களே முதியவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன்படி ஏரியின் கரையில் இருந்து சரிவான பகுதியில் மனித சங்கிலி போல் வாலிபர்கள் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி ஏரிக்குள் இறங்கி தண்ணீரில் மிதந்தபடி உயிருக்கு போராடிய முதியவரை உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

விசாரணையில் அவரது பெயர் முத்து (வயது 60) என்பதும், தண்ணீர் குடிக்க ஏரியில் இறங்கியபோது தவறி உள்ளே விழுந்துவிட்டதும், ஏற்கனவே அவரது காலில் அடிபட்டு பலத்த காயம் இருப்பதும் தெரிந்தது. தன்னை காப்பாற்றிய வாலிபர்களிடம் அவர், "நீங்கள் மட்டும் என்னை காப்பாற்றாவிட்டால் தண்ணீரில் மூழ்கி இறந்து இருப்பேன்" என கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்