நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிண்டு பாலகிருஷ்ணன் அறிவுறுத்தல் படியும், சாராய கடத்தலை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று நாகூர் வெட்டாற்று பாலம் அருகில் நாகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். மேலும் காரில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாகை அம்மாகண்ணு தோட்டம் கீரை கொல்லை தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் பிரபாகரன் (வயது 37) என்பதும், சாராய பாட்டில்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்து, அவரிடம் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சாராய பாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தியை காரையும் பறிமுதல் செய்தனர்.