நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்ட இளைஞர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் -பிரதமர் பேச்சு
நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்ட இளைஞர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் அமைந்துள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் உள்பட 2,314 பேருக்கு பட்டம் வழங்கினார். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-
காந்திகிராமத்திற்கு வருவது மிகவும் உத்வேகமான அனுபவம். கிராம மக்களின் எளிமையான வாழ்க்கை, தியாகம் மகாத்மாகாந்தியை மிகவும் கவர்ந்தது. காந்திய வழியிலான வாழ்க்கை, இளைஞர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மகாத்மா காந்தியின் சிந்தனை இன்றைய காலகட்டத்துக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது.
அவருடைய கருத்து உலகம் எதிர்கொள்ளும் பல சவால்கள், பல பிரச்சினைகளுக்கு பதிலை தருகின்றன. காந்திய வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தால் மாணவர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
காதிக்கு புத்துயிர்
நீண்ட நாட்களாக புறக்கணிக்கப்பட்ட மற்றும் மறுக்கப்பட்ட காதி தற்போது புத்துயிர் பெற்று இருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில், காதி துறையின் விற்பனை 300 சதவீதம் அதிகரித்து உள்ளது. "காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் கடந்த ஆண்டு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி இருக்கிறது. காதி சுற்றுச்சூழலுக்கு ஏற்றது என்பதால் உலகளாவிய பேஷன் பிராண்டுகள் கூட காதியை ஏற்று கொண்டுள்ளன. கிராமங்களில் காதியை தன்னிறைவுக்கான ஒரு கருவியாக மகாத்மா காந்தி பார்த்தார்.
சுதேசி இயக்கத்தின் முக்கிய மையமாக தமிழ்நாடு இருந்தது. கிராமப்புற மேம்பாட்டை நோக்கிய அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வை, மகாத்மா காந்தியின் லட்சியங்களில் இருந்து உத்வேகம் பெறுகிறது. நகரம், கிராமங்களுக்கு இடையே வளர்ச்சியில் வேறுபாடு இருக்க கூடாது. கிராமங்களின் முன்னேற்றமே நாட்டின் வளர்ச்சி. கிராமங்களின் ஆன்மா நகரங்களின் வசதி ஆகும்.
கிராமப்புற வளர்ச்சி
கிராமங்கள் முழுமையான சுகாதாரம் பெறுவதற்கு தூய்மை பாரதம் இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. அதேபோல் 6 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு மற்றும் 2.5 கோடி மின் இணைப்புகள் மற்றும் கிராமங்களை சாலைகள் மூலம் இணைக்கப்படுகின்றன.
நமது அரசு அடிப்படை வசதிகளை வழங்குவதோடு நின்றுவிடவில்லை. நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்களுடன் கிராமங்களை இணைக்கிறது. 2 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை இணைக்கும் வகையில் 6 லட்சம் கிலோமீட்டர் தொலைவுக்கு பைபர் கேபிள் இணையதள இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. கிராமப்புற வளர்ச்சியில் நீடித்து நிலைக்க வேண்டியது அவசியம். நிலவரைபடம் தயாரித்தல், விவசாயத்துக்கு டிரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இயற்கை விவசாயம்
இளைஞர்கள் இதுபோன்ற துறைகளில் தலைமைத்துவத்தை வழங்க வேண்டும். கிராமப்புறங்களின் எதிர்காலத்திற்கு நிலையான விவசாயம் மிகவும் முக்கியமானது. இயற்கை விவசாயத் திட்டம் பல மாற்றங்களை செய்து வருகிறது. ரசாயனம் இல்லாமல் இயற்கை விவசாயத்தில் இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.
சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்ட சிறுதானியங்கள் ஆரோக்கியம் நிறைந்ததாக மண் மற்றும் நீர் வளங்களுக்கு பாதுகாப்பானதாகவும் இருந்தன. அதனை நாம் இயற்கை விவசாயம் மூலம் மீட்டெடுக்க வேண்டும். இயற்கை விவசாயம் தான் மண் வளத்தை பாதுகாக்கும். மண் வளமே, மனித நலம்.
கிராமப்புறங்களில் சூரிய ஒளி மூலம் மின்சார உற்பத்தியை தொடங்கினால், மின்துறையில் நாடு தன்னிறைவு பெறும். குற்றங்களை தடுக்கவும் போதைப் பழக்கங்களிலிருந்து விடுபடவும், சமூக விரோத செயல்களில் விடுபடவும் காந்தியத்தை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்.
தமிழ் பண்பாடு
மகாத்மா காந்தி ஒன்றுபட்ட சுதந்திர இந்தியாவுக்காகப் போராடினார். காந்திகிராமமே இந்தியாவின் ஒருமைப்பாட்டின் கதை. தமிழ்நாடு எப்போதுமே தேசிய உணர்வின் தாயகமாக இருந்து வருகிறது. மேற்கிலிருந்து திரும்பிய சுவாமிவிவேகானந்தருக்கு தமிழக மக்கள் வீரவணக்கம் அளித்தனர். ராணுவ தளபதி பிபின் ராவத்துக்கு தமிழக மக்கள் வீர வணக்கம் செலுத்தியதை நினைவு கூருகிறேன்.
காசியில் விரைவில் நடைபெற உள்ள காசி தமிழ் சங்கமம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே உள்ள பந்தத்தை கொண்டாடுவோம். காசி மக்கள் தமிழக வரலாறு, பண்பாடு, கலாசாரத்தை கடைப்பிடிக்க தயாராகி விட்டனர். ஒருவருக்கொருவர் அன்பு, மரியாதை அளிப்பதே நமது ஒற்றுமைக்கு அடிப்படையாக இருக்கிறது. இளைஞர்கள் நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்டுவதில் முக்கிய பங்காற்ற வேண்டும்.
இந்தியா பிரகாசமான இடம்
ராணி வேலு நாச்சியார் இங்கு தங்கியிருந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டார். வேலுநாச்சியாரை போன்று இங்கு பட்டம் பெறும் இளம் பெண்களை மிகப் பெரிய மாற்றம் செய்பவர்களாக நான் பார்க்கிறேன். கிராமப்புற பெண்கள் வெற்றி பெற உதவ வேண்டும். கிராமப்புற பெண்களின் வெற்றி தேசத்தின் வெற்றி ஆகும்.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம், ஏழைகளுக்கான உணவுப் பாதுகாப்பு, உலகின் வளர்ச்சி எந்திரம் என ஒரு நூற்றாண்டில் மிக மோசமான நெருக்கடியை உலகம் எதிர்கொண்டது. அந்த நேரத்தில் இந்தியா ஒரு பிரகாசமான இடமாக இருக்கிறது. இந்தியா பெரிய விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று உலகம் எதிர்பார்க்கிறது.
புதிய இந்தியாவின் தூண்கள்
ஏனெனில் இந்தியாவின் சாதனை எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் உள்ளது. இளைஞர்கள் சவால்களை ஏற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், அவற்றை அனுபவித்து சாதிக்கின்றனர். கேள்வி கேட்பதோடு மட்டுமல்லாமல், பதில்களை கண்டுபிடிக்கின்றனர். அச்சமற்றவர்கள் மட்டுமல்ல, அசராதவர்கள். ஆசைப்படுவது மட்டுமல்லாமல் சாதிக்கவும் செய்கிறார்கள்.
இன்று பட்டம் பெறும் இளைஞர்களே புதிய இந்தியாவின் தூண்கள். அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாவை வழிநடத்தும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணை மந்திரி எல்.முருகன், பல்கலைக்கழக வேந்தர் அண்ணாமலை, துணை வேர்ந்தர் குர்மித்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.