ம.தி.மு.க.வை பலப்படுத்த இளைஞர்கள் முன்வர வேண்டும்-துரை வைகோ பேச்சு

ம.தி.மு.க.வை பலப்படுத்த இளைஞர்கள் முன்வர வேண்டும் என துரை வைகோ கூறினார்.

Update: 2022-10-30 19:23 GMT

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ம.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது குறித்து கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தனலட்சுமி சீனிவாசன் ஓட்டலில் நேற்று நடந்தது. கூட்டத்தில் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் வரதராஜன், துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெரம்பலூர் மாவட்ட பொருளாளர் ஜெயசீலன், பெரம்பலூர், அரியலூர் மாவட்ட அவைத்தலைவர்கள் செல்லகதிர்வேல், சகாதேவன், மாநில விவசாய அணி துணை செயலாளர் வாரணவாசி ராஜேந்திரன், பெரம்பலூர் மாவட்ட துணை செயலாளர் பேரளி சரவணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களை சேர்த்துள்ள படிவங்களை தலைமை நிலைய செயலாளர் துரை வைகோவிடம் கட்சி நிர்வாகிகள் அளித்தனர். அதனைப்பெற்றுக்கொண்டு துரை வைகோ பேசும்போது கூறியதாவது:- 29 ஆண்டுகளை கடந்துள்ள ம.தி.மு.க.வை பலப்படுத்திட இளைஞர்கள் முன்வர வேண்டும். தங்களது பகுதிகளில் நடக்கும் சிறிய, சிறிய நிகழ்வுகளிலும், உள்ளாட்சிகளில் மக்கள் குறைகளை தீர்ப்பதில் நமது கட்சி தொண்டர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு அவ்வப்போது சமூக உதவிகள் செய்தால், கட்சி வளரும். ம.தி.மு.க.விற்கு வளமான எதிர்காலம் உள்ளது. தற்போது சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனை உணர்ந்து நம் கட்சி தொண்டர்கள் ஆற்றும் சேவைகள், களப்பணிகளை சமூக ஊடகங்களில் உடனுக்குடன் பதிவிடுவது அவசியமாகிறது. நமது ஆற்றலையும், ஆர்வத்தையும் குலைக்கும் விமர்சனங்களை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ம.தி.மு.க.வை பலப்படுத்த இளைஞர்கள், மாணவர்கள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்