இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையும், முயற்சியும் வாழ்க்கையில் எப்போதும் இருக்க வேண்டும்:அமைச்சர் பேச்சு

இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையும், முயற்சியும் வாழ்க்கையில் எப்போதும் இருக்க வேண்டும் என தாந்தோணிமலையில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார்.

Update: 2023-01-22 18:30 GMT

வேலை வாய்ப்பு முகாம்

கரூர் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி நேற்று 262 நிறுவனங்கள் மூலம் 26 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி கணேசன், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். பின்னர் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்ய இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

தன்னம்பிக்கை இருக்க வேண்டும்

தொடர்ந்து அமைச்சர் சி.வி கணேசன் பேசுகையில், இளைஞர்களுக்கு வாழ்க்கையில் லட்சியம் வேண்டும், குறிக்கோள் வேண்டும். குறிக்கோள் இல்லாத மனிதன் இலக்கை அடைய முடியாது. நாம் எங்கு செல்ல வேண்டும் என்று தீர்மானித்தால் தானே அங்கு செல்ல முடியும். தமிழகம் முழுவதும் 21 இடங்களில் இதுபோன்று வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி அதன் மூலம் 1 லட்சத்து 14 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்து இருக்கிறோம்.

நீங்கள் ஒரு கம்பெனிக்கு வேலைக்கு போனால் அந்த கம்பெனியில் மட்டும் தான் வேலை கேட்க முடியும். ஆனால் இங்கு 262 கம்பெனிகள் வந்து உள்ளனர். நீங்கள் எந்த கம்பெனியை வேண்டுமானாலும் தேர்வு செய்து வேலையை பெற்றுக் கொள்ளலாம். இளைஞர்களுக்கு, தன்னம்பிக்கையும் முயற்சியும் வாழ்க்கையில் எப்போதும் இருக்க வேண்டும். முயற்சிக்கு ஏற்ற சிந்தனை வேண்டும். சிந்தனைக்கு ஏற்ற உழைப்பு வேண்டும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும், என்றார்.

91 ஆயிரம் பேர் வேலைக்காக...

தொடர்ந்து அமைச்சர். வி.செந்தில்பாலாஜி பேசுகையில், இளைஞர்களின் தகுதிக்கேற்ப வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வேலை வாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் 91 ஆயிரம் பேர் வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளனர். அவர்களுக்கு முடிந்தவரை அரசு துறைகளிலும் மற்றவர்களுக்கு தனியார் துறையிலும் திறமைக்கு ஏற்ப வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதற்காக முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது, என்றார்.

தண்ணீர் திறப்பு

தொடர்ந்து கரூர் வெள்ளியணை ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி ஏரியில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர்கள் சி.வி.கணேசன், வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு மததகுககளில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தனர்.

நிவாரண உதவி வழங்கல்

பின்னர் ஆர்.டி.மலையில் நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டி இறந்த பள்ளப்பட்டியை சேர்ந்த மாடுபிடிவீரர் சிவக்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமைச்சர்கள் சி.வி.கணேசன், வி.செந்தில்பாலாஜி ஆகியோர் ஆறுதல் கூறினர். பின்னர் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து அறிவிக்கப்பட்ட ரூ.3 லட்சத்திற்கான காசோலையும், தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சத்தையும் சிவக்குமாரின் குடும்பத்தினருக்கு வழங்கினர்.

இந்தநிகழ்ச்சிகளில், மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், வேலை வாய்ப்பு துறை மண்டல இணை இயக்குனர் ஞானசேகரன், எம்.எல்.ஏக்கள். மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்