இன்னும் ஒரு ரெய்டு நடந்தால்போதும்... அ.தி.மு.க., பா.ஜ.க. இணைப்பு குறித்து உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

இன்னும் ஒரு ரெய்டு நடந்தால், அ.தி.மு.க.வை பா.ஜ.க.வுடன் எடப்பாடி பழனிசாமி இணைத்துவிடுவார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Update: 2024-11-17 09:47 GMT

சென்னை,

சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 48 இணையர்களுக்கு திருமண விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், "எனது பிறந்தநாளை அர்த்தமுள்ள நாளாக மாற்றிய சென்னை வடக்கு மாவட்டத்திற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் எனக்கு 48 வயது ஆகிவிட்டது என சொல்லிக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக குறிஞ்சி இல்லத்தில் இரண்டு திருமணங்கள் முடித்து வந்த நிலையில் மொத்தமாக கணக்கிட்டு எனக்கு 50 வயது என கூறி விடாதீர்கள்.

இந்த திருமணத்தைப் பொறுத்தவரையில் சுயமரியாதை போன்று நடைபெற்றது. சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரத்தை, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியவர்கள்தான்பெற்று தந்தார்கள். இப்போதெல்லாம் இது போன்ற திருமணங்கள் தமிழ்நாடு முழுவதும் ஏராளமாக நடைபெறுகிறது. இது போன்ற பண்பாட்டு புரட்சியை திராவிட இயக்கம் நடத்திக் கொண்டிருப்பதால்தான், ஆரிய இயக்கத்திற்கும் ஆரிய அடிமைகளுக்கும் அடங்காத வயிற்றெரிச்சல், கோபம் வருகிறது. அவர்களின் வயதெரிச்சல் பற்றியும் கோவத்தைப் பற்றியும் நாம் அதிகம் கவலைப்பட தேவையில்லை.

கலைஞரின் கனவு திட்டமான மகளிர் உரிமைத்தொகை மாதாமாதம் பெறக்கூடியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 16 லட்சமாக உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நமது திட்டத்தை பார்த்து பயங்கரமாக கோபம் வருகிறது. குறிப்பாக மக்கள் நமது திட்டங்களை எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்பதை பார்த்து அவருக்கு கோபம் வருகிறது.

குறிப்பாக அவர் ஏன் எல்லா திட்டங்களுக்கும் கலைஞர் பெயர் வைக்கிறீர்கள் என்று கேட்கிறார். தனது 96 வயது வரையிலும் தமிழ்நாடு மக்களுக்காக அதிகமாக உழைத்தவர் கலைஞர். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்ஜிஆர் ,ஜெயலலிதா அவர்களின் பெயர்களை வைத்தால் கூட பழனிசாமி ஒற்றுக்கொள்ள மாட்டார். அவர் மோடி மற்றும் அமித்ஷா அவர்களின் பெயரை வைத்தால் மட்டுமே ஒத்துக் கொள்வார்.

எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க. எந்த காலகட்டத்திலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இருக்காது என்று தெரிவித்தார். வருமான வரித்துறையால் இன்னும் ஒரு ரெய்டு நடந்தால்போதும் அதிமுகவை பாஜகவுடன் இணைத்தாலும் இணைத்துவிடுவார் எடப்பாடி பழனிசாமி. 3 மாதம் முன்பு எந்தக் காலத்திலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்றார். சேலத்தில் 10 நாளுக்கு முன் ரெய்டு நடந்த அடுத்த நாளே, கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் பேசலாம் என்கிறார் அவர்.

வருகின்ற 2026 ம் ஆண்டு 200 சட்டமன்ற தொகுதிகளை திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற வேண்டும் என தலைவர் உத்தரவிட்டுள்ளார். தேர்தலுக்கு முன்பாக ஒவ்வொரு வாக்காளரிடமும் ஒன்றுக்கு ஐந்து முறையாவது நமது திட்டங்களை அவரிடம் கொண்டு சேர்க்க வேண்டும். குறிப்பாக 7வது முறையாக நமது கழகம் ஆட்சி அமைக்க உறுதுணையாக இருக்க வேண்டும்" என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்