2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் களமிறங்கும் தொகுதி இதுவா..? வெளியான தகவல்
த.வெ.க முதல் மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.;
சென்னை,
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். இந்த கட்சியின் முதல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. அதற்கேற்ப அரசியல் வியூகங்களை விஜய் அமைத்து வருகிறார்.
இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தர்மபுரி மாவட்டத்தில் போட்டியிடுவார் என்று அம்மாவட்ட தலைவர் சிவா தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் விஜய் போட்டியிடுவார் என்று மாவட்ட வழக்கறிஞர் அணி பிரிவு ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் அவர் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
2026 ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி ஒரு பக்கம் வலுவாக இருக்கும் நிலையில், மற்றொரு பக்கம் அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, சீமான் கட்சி போட்டியிடுகின்றன. இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் பங்கு இந்த தேர்தலில் எப்படி இருக்கும் என்பதை இதுவரை கணிக்க முடியவில்லை. அந்த கட்சியை எந்த கூட்டணியில் இணையும், அல்லது தனது தலைமையில் ஒரு கூட்டணி அமைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.