அய்யம்பேட்டை,
திருவையாறு அருகே கள்ளக்குடி புதுத்தெருவை சேர்ந்த மோகனசுந்தரம் மகன் அசோக்குமார் (வயது24). இவர் திருவையாறு மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று இவர் அய்யம்பேட்டை அருகே துளசேந்திரபுரம் கிராமத்தில் மின்கம்பங்களில் பல்பு மாட்டிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மேலே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்கம்பி மீது அசோக்குமார் கை பட்டது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவலறிந்த அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அசோக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.