எர்ணாவூரில் வாலிபர் வெட்டிக்கொலை

எர்ணாவூரில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update:2022-07-23 10:22 IST

சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு 23-வது பிளாக்கை சேர்ந்தவர் உமர் பாஷா (வயது 23). பீரோ செய்யும் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி சுபாஷினி.

உமர் பாஷா நேற்று இரவு பாரதியார் நகர் 5-வது தெருவில் உள்ள மசூதியில் தொழுகை செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் அதே தெரு வழியாக வீடு திரும்பினார்.

அப்போது 4 பேர் கொண்ட மர்மகும்பல் அவரை வழிமறித்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் உமர் பாஷாவை சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு தப்பி ஓடினர். இதில் படுகாயம் அடைந்த உமர் பாஷா, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த செங்குன்றம் துணை கமிஷனர் மணிவண்ணன், உதவி கமிஷனர் பிரம்மானந்தம், எண்ணூர் இன்ஸ்பெக்டர்கள் கிளாஸ்டின் டேவிட் மற்றும் சுதாகர் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

பின்னர் கொலையான உமர் பாஷாவின் உடலை பிரேத சோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

மேலும் கொலையாளிகள் கொலைக்கு பயன்படுத்திய 2 பட்டா கத்திகளையும், புதியதாக வாங்கிய மோட்டார் சைக்கிளையும் சம்பவ இடத்தில் விட்டு சென்று விட்டனர். அவற்றை போலீசார் கைப்பற்றினர். கொலை செய்யப்பட்ட உமர் பாஷா மீது 2 கொலை வழக்குகள் உள்ளதால் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்