கொட்டாம்பட்டி அருகே கண்மாயில் மூழ்கி வாலிபர் சாவு- தண்ணீரில் தவறி விழுந்த மகனை காப்பாற்ற முயன்றபோது பரிதாபம்

கொட்டாம்பட்டி அருகே கண்மாயில் குளிக்க சென்ற வாலிபர், தண்ணீரில் தவறி விழுந்த மகனை காப்பாற்ற முயன்றபோது நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-10-27 20:19 GMT

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே கண்மாயில் குளிக்க சென்ற வாலிபர், தண்ணீரில் தவறி விழுந்த மகனை காப்பாற்ற முயன்றபோது நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

குளிக்க சென்றார்

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள கச்சிராயன்பட்டி பால்குடியை சேர்ந்தவர் சின்னையா. இவருடைய மகன் ஸ்டாலின் (வயது 29). விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை அங்குள்ள நெவுலி கண்மாயில் குளிப்பதற்கு ஸ்டாலின் சென்றார்.

அப்போது அவரது 3 வயது மகன் நிதிஷையும் அழைத்து சென்றார். கண்மாயில் குளிக்கும்போது தடுமாறி தண்ணீருக்குள் விழுந்த தனது மகனை காப்பாற்ற ஸ்டாலின் தண்ணீரில் குதித்தார். ஆனால் அவரும் நீரில் மூழ்கினார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கருங்காலக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

விசாரணை

இதில் ஸ்டாலினை ஆபத்தான நிலையில் மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஸ்டாலின் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சிறுவன் நிதிஷ்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்