போலீஸ் காவலில் வாலிபர் மரணம்: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி

போலீஸ் காவலில் வாலிபர் மரணம் அடைந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-11-02 23:23 GMT

சென்னை,

சென்னை தலைமை செயலக குடியிருப்பு போலீசார் கடந்த ஏப்ரல் 18-ந்தேதி இரவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆட்டோவில் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் வந்த விக்னேஷ் என்ற வாலிபரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். போலீஸ் காவலில் அவர் மரணம் அடைந்தார்.

இது தொடர்பாக கொலை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் மீது, சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார், பவுன்ராஜ், போலீஸ்காரர்கள் முனாப், ஜெகஜீவன், சந்திரகுமார், ஊர்காவல் படையை சேர்ந்த தீபக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணை மாற்றம்

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் முறையாக விசாரிக்கவில்லை எனவும், எனவே சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில், விக்னேசின் உறவினர்கள் வினோத், விஜய், சத்தியா ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுவை நீதிபதி வி.சிவஞானம் விசாரித்தார். இதில் மனுதாரர்கள் தரப்பில், 'போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் என்பவர் மனுதாரர்கள் வீட்டுக்கு வந்து ஒரு லட்சம் ரூபாயை கொடுத்து வழக்கை முடிக்க முயற்சித்ததால், விசாரணை நியாயமாக நடக்குமா? என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும், இந்த வழக்கை விசாரித்து குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்யவில்லை' என்று வாதிடப்பட்டது.

போலீஸ்காரர்கள் கைது

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் இ.ராஜ் திலக், "இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் முறையாகவும், பாரபட்சமற்ற முறையிலும் விசாரித்துள்ளனர். 84 சாட்சிகளிடம் விசாரித்து, 15 கண்காணிப்பு கேமரா பதிவுகள், ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. புலன் விசாரணை முடிவடையும் நிலையில் உள்ளது. குற்றப்பத்திரிகையும் விரைவில் தாக்கல் செய்யப்படும். அதனால், சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக்கூடாது" என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

வழக்கின் புலன் விசாரணை குறித்த ஆவணங்களை ஆய்வு செய்ததில், சம்பவம் தொடர்பாக 6 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆதாரம் இல்லை

நேரில் பார்த்த சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து ரத்தக்கறை படிந்த இரும்பு கம்பி மற்றும் லத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றை பார்க்கும்போது, சி.பி.சி.ஐ.டி. போலீசார் பாரபட்சமான முறையில் விசாரணை நடத்துவதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை. விசாரணை முடியும் தருவாயில் உள்ள நிலையில் இதில் ஐகோர்ட்டு தலையிட முடியாது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்