லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

தரங்கம்பாடி அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியானார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-23 18:44 GMT

பொறையாறு:

தரங்கம்பாடி அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியானார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துக்க நிகழ்ச்சி

காரைக்கால் மாவட்டம் தலத்தெரு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவருடைய மகன் விஸ்வநாத் (வயது29). இவர் சரக்கு வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.இவர் நேற்று காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே கிள்ளியூர் கிராமத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு துக்க நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

லாரி சக்கரம் ஏறி இறங்கியது

தரங்கம்பாடி அருகே சாத்தங்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது முன்னால் சென்ற பொக்லின் எந்திரத்தை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக பொக்லின் எந்திரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி விஸ்வநாத் தவறி சாலையில் விழுந்தார். அப்போது எதிரே வந்த லாரியின் சக்கரம் விஸ்வநாத் மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விஸ்வநாத் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

மேலும், லாரி மற்றும் பொக்லின் ஏந்திரத்தை பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான விஸ்வநாத்திற்கு வினோதினி என்ற மனைவியும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்