ரெயில்வே ஜங்ஷன் முன் இளைஞர் காங்கிரசார் முற்றுகை போராட்டம்
ரெயில்வே ஜங்ஷன் முன் இளைஞர் காங்கிரசார் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'அக்னிபத்' திட்டத்தை எதிர்த்து திருச்சி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக நேற்று ரெயில்வே ஜங்ஷன் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் சந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு என்ற லெனின்பிரசாத் கலந்து கொண்டார். போராட்டத்தின்போது, 17 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து 4 ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற முடியும். அதன் பின்னர் ஓய்வூதியம், பணிக்கொடை ஆகியவை வழங்கப்படாது. ஆனால் இதில் பணியாற்றியவர்கள் துணை ராணுவ படையில் சேர முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எனவே மத்திய அரசு கொண்டு வந்த இந்த திட்டத்தை கைவிடக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனுமதியின்றி முற்றுகை போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரசார் 20 பேரை கைது செய்தனர்.