தொழிலாளி கொலை - வாலிபர் கைது

கடையநல்லூரில் தொழிலாளி கொலையில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-13 18:45 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூரில் தொழிலாளி கொலையில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தொழிலாளி கொலை

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மாவடிக்கால் காளியம்மன் கோவில் திடல் அருகில் உள்ள தெருவைச் சேர்ந்தவர் தெட்சனை என்ற சாமி (வயது 55). இவர் கடையநல்லூரை அடுத்த புதுக்குடி மங்களபுரம் சாலையில் உள்ள பாண்டி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். மேலும் அங்குள்ள கோழிப்பண்ணையில், ஆய்க்குடி அகரகட்டு பகுதியைச் சேர்ந்த ஜோசப், அவருடைய மனைவி லில்லி ஆகியோர் தங்கியிருந்து தொழிலாளர்களாக வேலை செய்தனர். இவர்களுடைய மகன் பெஞ்சமின் (25). இவர் நேற்று முன்தினம் மதியம் வழக்கம்போல் பெற்றோரை பார்ப்பதற்காக தோட்டத்துக்கு சென்றார்.

அங்கு சாமிக்கும், பெஞ்சமினுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பெஞ்சமின் அரிவாளால் சாமியை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் பெஞ்சமின் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். சாமியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பெஞ்சமினை வலைவீசி தேடி வந்தனர்.

வாலிபர் கைது

இந்தநிலையில் அருகில் உள்ள தோட்டத்தில் பெஞ்சமின் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் விரைந்து சென்று பெஞ்சமினை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

இறந்து போன சாமியின் மகன் பசுபதி காளி என்பவர் தமிழர் விடுதலை களம் அமைப்பின் கடையநல்லூர் நகரச் செயலாளராக உள்ளார். இதையொட்டி ஏராளமான கட்சி நிர்வாகிகள் கடையநல்லூருக்கு வந்தனர். இதனால் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க கடையநல்லூர், மாவடிக்கால் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம். தொடர் போராட்டம் நடத்துவோம் என கூறியதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், அரசு சார்பில் நிவாரண நிதி வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் சாமியின் உடலை பெற்றுக்கொண்டு அடக்கம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்