திண்டிவனம் அருகே குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
திண்டிவனம் அருகே குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
விழுப்புரம்,
திண்டிவனம் கிடங்கல்-2 ராஜன் தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் ராஜேஷ் (வயது 22). இவர் மீது திண்டிவனம் பகுதிகளில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 13.9.2022 அன்று காலை திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் பஸ் நிறுவனத்தில் பணம் கேட்டு தராததால் கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததோடு அந்த அலுவலகம் மற்றும் பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திய சம்பவத்தில் ராஜேசை திண்டிவனம் போலீசார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். அதன்பேரில் ராஜேசை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டார். இதையடுத்து ராஜேசை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.