காவல்துறை வாகனங்களுக்குதீ வைத்த வழக்கில் வாலிபர் கைது

கனியாமூரில் நடந்த கலவரத்தில் காவல்துறைக்கு சொந்தமான வாகனங்களை தீ வைத்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். விட்டு சென்ற வாகனங்களின் உரிமையாளர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்

Update: 2022-07-25 17:55 GMT

சின்னசேலம்

தனியார் பள்ளியில் கலவரம்

சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 17-ந் தேதி நடந்த கலவரத்தின்போது போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து சூறையாடியதோடு அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் பாதுகாப்புக்கு வந்த போலீஸ் வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர்.

இந்த வன்முறை சம்பவம் குறித்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் வீடியோ பதிவுகள், போட்டோ ஆகியவற்றை வைத்து ஆள் அடையாளம் கண்டு சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

2 போ் பிடிபட்டனர்

இதில் போலீஸ் வாகனங்களை தீ வைத்து கொளுத்திய சம்பவம் தொடர்பாக நேற்று சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பிறகு போலீஸ் பஸ்சுக்கு தீ வைத்தது தொடர்பாக சின்னசேலம் அருகே உள்ள பூசப்பாடி கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் மணிகண்டன்(வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர். இன்னொரு வாலிபரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவர்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் வன்முறையில் தொடர்புடைய மேலும் சிலர் கைது செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.

உரிமையாளர்களிடம் விசாரணை

இந்த நிலையில் கலவரத்தின்போது விட்டுச்சென்ற இரு சக்கர வாகனங்களின் உரிமையாளர்கள் யாருக்கேனும் கலவரத்தில் தொடர்பு இருக்கிறதா? என்பதை அறிவதற்காக அந்த வாகனங்களில் உள்ள பதிவு எண்களை வைத்து அதன் உரிமையாளரின் பெயர், முகவரி அடங்கிய பட்டியலை சேகரித்து சம்பந்தப்பட்டவர்களிடம் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலவரம் தொடர்பாகை கைதாகி சிறையில் இருப்பவர்களின் வாகனங்களும் இந்த பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. போலீசாரின் இந்த விசாரணையில் தலைமறைவாக உள்ள மேலும் சிலர் கைதாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்