மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
ஆம்பூரில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று முன்தினம் பஸ் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு சைக்கிள் நிறுத்தத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நிற்பதாக ஊழியர்கள் கூறினர். அந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இதில் அந்த மோட்டார் சைக்கிள் ஆம்பூர் எஸ்.கே.ரோடு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் நாச்சார் குப்பம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது 26) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றதும், அதை ஆம்பூர் சைக்கிள் நிறுத்தத்தில் விட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.