வாழை இலை வியாபாரியிடம் நகை பறித்த வாலிபர் கைது
பொள்ளாச்சி அருகே வாழை இலை வியாபாரியிடம் நகை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கிணத்துக்கடவு
பொள்ளாச்சி அருகே வாழை இலை வியாபாரியிடம் நகை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வியாபாரி
பொள்ளாச்சி அருகே வடக்கிபாளையத்தை அடுத்த கானல்புதூர் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் காளீஸ்வரன்(வயது 47). வாழை இலை வியாபாரி. இவர் கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி தனது அண்ணன் மகனுடன் மூலக்கடை-முத்துக் கவுண்டனூர் சாலையில் குப்பியன் கோவில் அருகே மொபட்டில் சென்றார்.
அப்போது அவரை அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் வழிமறித்து பெட்ரோல் நிலையத்துக்கு செல்ல வழி கேட்டனர். அதற்கு பதில் அளித்து கொண்டு இருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க நகையையும், ெமாபட்டின் சாவியையும் பறித்துக்கொண்டு, அந்த வாலிபர் தப்பி சென்றார்.
கைது
இதனால் அதிர்ச்சி அடைந்த காளீஸ்வரன், கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய வாலிபரை வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலையில் கிணத்துக்கடவு பழைய பஸ் நிலையம் அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டு ஓட்டம் பிடித்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் காளீஸ்வரனிடம் நகை பறித்த நெல்லை மாவட்டம் கீழ முன்னீர் பள்ளம் பகுதியை சேர்ந்த செல்லையா என்பவரது மகன் மகாராஜன் என்ற அருண்பாண்டியன்(வயது 24) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 2 பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மீது முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் கொலை, அடிதடி உள்ளிட்ட 3 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.