தாமிர கம்பிகள் திருடிய வாலிபர் கைது
நெய்வேலியில் தாமிர கம்பிகள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெய்வேலி,
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மிராலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம் மகன் மணிகண்டன் (வயது 40). இவர் நெய்வேலி 1-வது வட்டம் பகுதியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தில் தனியார் நிறுவன பாதுகாப்பு அதிகாரியாக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஒரு பகுதியில் சுமார் 120 மீட்டர் தாமிர கம்பிகளும், சுமார் 25 கிலோ எடை உள்ள இரும்பு பொருட்களையும் மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இது குறித்து மணிகண்டன் நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மாற்று குடியிருப்பு ஏ பிளாக் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சிவகண்டன் (36) என்பவர் தான் அவற்றை திருடியது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.37 ஆயிரம் மதிப்புள்ள தாமிர கம்பிகள் மற்றும் இரும்பு பொருட்களை பறிமுதல் செய்தனர்.