விவசாயியை பாட்டிலால் குத்திய வாலிபர் கைது

கோட்டூர் அருகே விவசாயியை பாட்டிலால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-09 18:45 GMT

கோட்டூர்:

கோட்டூர் அருகே விவசாயியை பாட்டிலால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா விற்பனை

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே கீழப்பனையூர் பூங்குளத் தெருவை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது22). திருப்பத்தூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரமணி (37). விவசாயியான இவர் கிராம கமிட்டி தலைவராக இருந்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ஆகாஷை கோட்டூர் போலீசார் கைது செய்தனர். வீரமணி தான் தன்னை போலீசில் மாட்டி விட்டதாக அவர் மீது ஆகாஷ் ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

பாட்டில் குத்து

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீரமணி திருப்பத்தூர் கடைவீதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆகாஷ் மற்றும் அவரது நண்பர் கீழப்பனையூர் கீழ சேத்தியை சேர்ந்த விக்னேஷ் ஆகிய 2 பேரும், வீரமணியிடம் கஞ்சா விற்பனை செய்வதை ஏன் போலீசாரிடம் தெரிவித்தாய் என கேட்டு தகராறு செய்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆகாஷ் அருகில் கிடந்த பாட்டிலை எடுத்து வீரமணியை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

வாலிபர் கைது

இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேகநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாஷை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய விக்னேசை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்