வனவிலங்குகளை வேட்டையாடிய வாலிபர் கைது

தெற்கு வீரவநல்லூர் பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்

Update: 2022-11-23 23:00 GMT

களக்காடு:

களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெற்கு வீரவநல்லூர் பீட்டில் வருவாய் துறையினருக்கு சொந்தமான கன்னிப்பொத்தை பகுதியில் சுற்றி திரியும் வனவிலங்குகளை மர்மநபர்கள் வேட்டையாடுவதாக களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே களக்காடு வனச்சரகர் பிரபாகரன் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தெற்கு வீரவநல்லூர் பாரதிநகரை சேர்ந்த முருகன் மகன் செந்தில்வேல் முருகன் (வயது 23) வனத்துறையினரை பார்த்ததும் தப்பி ஓடினார். அவரை வனத்துறையினர் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் மற்றும் அவரது கூட்டாளிகளான வெள்ளாங்குழியை சேர்ந்த சேது மகன் மகேஷ் (24), நெல்லை அருகே கருப்பந்துறையை சேர்ந்த செல்லப்பாண்டி (28) உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து கடந்த ஒரு ஆண்டாக இரவில் கன்னிப்பொத்தை பகுதியில் நாய்களை வைத்து விரட்டியும், கண்ணி வைத்தும் முயல். உடும்பு, காட்டுப்பூனை உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி, அவற்றின் கறியை சமைத்து சாப்பிட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து செந்தில்வேல் முருகனை வனத்துறையினர் கைது செய்து, சேரன்மாதேவி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நாங்குநேரி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மகேஷை வீரவநல்லூர் போலீசார் ஏற்கனவே கொலை முயற்சி வழக்கில் கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலைமறைவான செல்லப்பாண்டி உள்பட 3 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்