பேக்கரியை வாளால் சூறையாடிய வாலிபர் கைது
நெல்லை டவுனில் பேக்கரியை வாளால் சூறையாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை டவுன் சாலியர் தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 60). இவர் அந்த பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவருக்கும், டவுன் அடைக்கலமாதா தெருவைச் சேர்ந்த மாதவன் (25) என்பவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டு உள்ளது. கஞ்சா விற்பனை தொடர்பாக மாதவன் குறித்து தங்கராஜ் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு தங்கராஜ் கடைக்கு மாதவன் வாள் எடுத்து சென்று, அங்கு கடையின் முகப்பில் இருந்த பாட்டில்கள், பொருட்களை சூறையாடினார். பின்னர் அவர் மிரட்டல் விடுத்தவாறு அங்கிருந்து சென்றார். இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இது சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நெல்லை டவுன் போலீஸ் நிலையத்தில் தங்கராஜ் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான மாதவனை தேடி வந்தனர். நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில், போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடினர். இந்த நிலையில் செல்போன் சிக்னல் மூலம் மாதவன் கோவையில் பதுங்கியது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு தனிப்படை போலீசார் விரைந்து சென்று நேற்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.