விருத்தாசலத்தில்காதல் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபர் கைது
விருத்தாசலத்தில் காதல் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
விருத்தாசலம்,
விருத்தாசலம் கஸ்பா தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் ஜெகன் (வயது 32). இவரும் அதேபகுதியை சேர்ந்த கல்பனா (30) என்ற பெண்ணும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு ஜெகனின் பெற்றோா் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஜெகன், கல்பனாவை திருமணம் செய்துகொள்ள மறுத்து விட்டார். இதில் மனமுடைந்த கல்பனா கடந்த ஆண்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதுடன், இதுபற்றி விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், ஜெகன் கல்பனாவை காதலித்து திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், கல்பனாவுக்கும் ஜெகனுக்கும் திருமணம் செய்து வைத்தனர். ஆனால், அன்றைய தினம் இரவே ஜெகன் தலைமறைவாகி விட்டார். இதனால் கல்பனா, ஜெகன் குடுபத்தினரிடையே தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே மாயமான கணவரை கண்டுபிடித்து தருமாறு கல்பனா விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் ஜெகனை தேடி வந்தனர்.
இந்தநிலையில் திருமணமான முதல் நாளிலேயே கணவர் தலைமறைவாகி விட்டதால் விரக்தியில் இருந்து வந்த கல்பனா கடந்த மார்ச் 13-ந்தேதி இரவு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கல்பனாவை தற்கொலைக்கு தூண்டியதாக கூறி ஜெகன் உள்பட 6 பேர் மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து, தந்தை முருகன் (57), தாய் சாந்தி (47), வாசுகி (38), தங்கை கார்த்திகா, மைத்துனர் திலீப்குமார் ஆகியோரை கடந்த 21-ந்தேதி கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முருகனையும் நேற்று போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.