தமிழகம், கர்நாடகாவில் மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது

ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து தருவதாக தமிழகம், கர்நாடகாவில் மோசடியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-13 18:45 GMT

அடுத்தடுத்து கைவரிசை


திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த தொழிலாளி பிலால். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றார். அங்கு அவருக்கு, ஒரு டிப்-டாப் ஆசாமி பணம் எடுத்து கொடுத்து உதவினார். பின்னர் பிலால் வீட்டுக்கு திரும்பிய நிலையில், அவருடைய வங்கி கணக்கில் இருந்து மேலும் ரூ.50 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. உடனே அவர் ஏ.டி.எம். கார்டு சோதித்த போது, அது மற்றொரு நபருடையது என்பது தெரியவந்தது.


இதேபோல் சீலப்பாடியை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சாகுல். இவர் திண்டுக்கல்லில் ஒரு வங்கியில் ரூ.1½ லட்சத்தை எடுத்து, மொபட் பெட்டியில் வைத்து கொண்டு நாகல்நகருக்கு மிட்டாய் வாங்க வந்தார். அங்கு ஒரு கடை முன்பு மொபட்டை நிறுத்தி விட்டு மிட்டாய் வாங்கி கொண்டு திரும்பி வருவதற்குள், மொபட் பெட்டியை உடைத்து யாரோ பணத்தை திருடி சென்றுவிட்டனர்.


வேலூர் வாலிபர் கைது


திண்டுக்கல்லில் அடுத்தடுத்த நாட்களில் நடந்த 2 சம்பவங்கள் குறித்து தெற்கு போலீசார் விசாரித்து வந்தனர். இதற்கிடையே ஒட்டன்சத்திரத்தில் ஒருவரிடம் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து தருவதாக மோசடி நடந்தது. எனவே 3 சம்பவங்கள் குறித்து விசாரிக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் திண்டுக்கல் போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் தலைமையில் குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டி, போலீசார் விசாரணை நடத்தினர்.


மேலும் சம்பவ இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 3 சம்பவங்களிலும் ஒரே நபர் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் பிற மாவட்டங்களில் திருட்டு, மோசடியில் ஈடுபட்டவர்களின் விவரங்களை சேகரித்து விசாரித்தனர்.


அதில் வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த அருண்குமார் (வயது 30) மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், தமிழகம், கர்நாடகாவில் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுத்து தருவது போன்று உதவி செய்து ஏ.டி.எம்.கார்டை மாற்றி பணம் எடுத்து மோசடி செய்தல் மற்றும் திருட்டு சம்பவங்களில் அவர் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் டிப்-டாப்பாக வலம் வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்