காரியாபட்டி
நரிக்குடி அருகே உள்ள சீனிக்காரனேந்தல் விலக்கில் கண்டாக்குளம் பகுதியை சேர்ந்த பாண்டி மற்றும் அவரது பேத்தியும் பஸ் நிறுத்தத்தில் இறங்கி கிழவிகுளம் கிராமத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர் பாண்டியை வாளால் தாக்கிவிட்டு அவர்களிடமிருந்த செல்போன், பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார். இந்தகொள்ளை சம்பவம் குறித்து நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நரிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமநாராயணன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு வழிப்பறியில் ஈடுபட்ட நபரை தீவிரமாக தேடி வந்தனர். போலீசாரின் விசாரணையில் நரிக்குடி அருகே உள்ள கீழக்கொன்றைக்குளம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்ற பாலமுருகன் (வயது 23) என்பவர் தான் செல்போன் மற்றும் பணத்தை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து சிந்தாமனி புதூர் பகுதியில் பதுங்கியிருந்த சீனிவாசன் என்ற பாலமுருகனை போலீசார் கைது செய்தனர்.