ரூ.76 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது
ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.76 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
காரைக்குடி,
ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.76 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஷேர் மார்க்கெட்
காரைக்குடி கண்ணதாசன் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 56). இவரது நண்பர் வைரவபுரத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன். இவர் ஆறுமுகத்திடம் பங்குச்சந்தையில் (ஷேர் மார்க்கெட்டில்) முதலீடு செய்தால் அதிக வருமானம் ஈட்டலாம் எனவும், அதில் முதலீடு செய்யுங்கள் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய ஆறுமுகம், ராஜேஷ் கண்ணன் மூலமாக ஷேர் மார்க்கெட்டில் சில லட்சங்களை முதலீடு செய்துள்ளார். அப்போது ஆறுமுகமே எதிர்பாராத அளவிற்கு லாப தொகையை ராஜேஷ் கண்ணன் கொடுத்துள்ளார். ஒரு வருடமாக ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து ராஜேஷ் கண்ணன் மூலம் பங்கு லாப தொகையினை பெறுவதுமாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் ஆறுமுகம் ரூ.34 லட்சத்தை ராஜேஷ் கண்ணன் மூலம் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ததோடு தனது நண்பர்கள் மூலம் ரூ.42 லட்சம் முதலீடு செய்துள்ளார். ஆனால் அதற்கான லாபத்தொகையை ராஜேஷ் கண்ணன் பெற்றுத்தரவில்லையாம்.
வாலிபர் கைது
இது குறித்து ஆறுமுகம் கேட்டபோது பங்கு மதிப்பு உயரட்டும் அப்போதுதான் லாபம் பெற முடியும் என சில காரணங்களை கூறி வந்தார். நீண்ட நாட்களாக எந்த தொகையையும் ராஜேஷ் கண்ணன் கொடுக்காததால் அவரிடம் ஆறுமுகம் முதலீட்டுக்காக வாங்கிய பணத்தை மட்டும் திருப்பி கொடுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் பல்வேறு காரணங்களை கூறி நாட்களை கடத்தி வந்துள்ளார்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆறுமுகம் இது குறித்து காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலினிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் அழகப்பாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.76 லட்சம் மோசடி செய்ததாக ராஜேஷ் கண்ணனை(35) கைது செய்தனர்.