கிராம நிர்வாக உதவியாளரை தாக்கிய வாலிபர் கைது
திருக்கடையூர் அருகே கிராம நிர்வாக உதவியாளரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருக்கடையூர்:
திருக்கடையூர் அருகே கிடங்கள் நத்தம் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது35). இவர், திருக்கடையூரில் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். கிடங்கள் நத்தம் பகுதியை சேர்ந்த ரத்தினவேல் (35), ரவிந்திரன் (38), அஞ்சம்மாள் (60), வாசகி (35) ஆகியோருக்கும், ரமேசுக்கும் வேலி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 2 தரப்பினர் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள், ரமேசை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரத்தினவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.